Sunday, March 16, 2014

ஆதியும் அந்தமும் - சினிமா விமர்சனம்

ஊட்டி மருத்துவக் கல்லூரி ஒன்றில் சைக்காலஜிஸ்ட் டாக்டராக வந்து சேருகிறார் நாயகன் ஆதி. மருத்துவமனையும், கல்லூரியும் ஒரே இடத்தில் இருக்கும் அந்த கல்லூரியிலேயே தங்கி பணிபுரிந்து வருகிறார். 

இவர் தங்கி இருக்கும் அறையில் இரவு 1 மணி ஆனதும் ஒரு பெண்ணின் ஆவி வந்து செல்கிறது. அது யார் என்பதை அறிய ஆதி முற்படுகிறார். அந்த ஆவியை தினமும் பின்தொடர்கிறார். ஆனால், அதில் அவருக்கு விடை கிடைப்பதில்லை. 

இந்நிலையில், அந்த மருத்துவமனைக்கு டிவியில் இருந்து ஒரு பெண் வருகிறாள். அவள் அந்த மருத்துவமனையைப் பற்றி நிகழ்ச்சி ஒன்றை தயாரிப்பதற்காக கேமராவுடன் வந்து அங்கேயே தங்குகிறாள். 

அவளை சந்திக்கும் நாயகன் அவளிடம் எனது அறையில் தினமும் 1 மணிக்கு ஒரு பெண்ணின் ஆவி வந்து போகிறது. அந்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம். அதற்கு இந்த மருத்துவமனையில் வேலை செய்பவர்கள் காரணமாக இருக்கலாம். அதை நீயும், நானும் சேர்ந்து கண்டுபிடிக்கலாம் என கூறுகிறார். 

இதற்கு ஒத்துக்கொள்ளும் அந்த பெண், நாயகனுடன் சேர்ந்து ஒருநாள் அந்த மருத்துவமனையின் ஒரு பகுதியில் இருக்கும் கல்லறைக்கு சென்று இதற்கான காரணத்தை அறிய முற்படுகின்றனர். அப்போது, நாயகன் திடீரென காணாமல் போய்விடுகிறார். 

இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம்தான் காரணம் எனக்கூறி அடுத்தநாள் காலையில் கல்லூரி முதல்வரிடம் சென்று இதுகுறித்து சண்டை போடுகிறாள். அந்த கல்லூரி முதல்வரோ, நாயகனான ஆதி மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவளிடம் கூறுகிறார். இதைக்கேட்டு அந்த பெண் அதிர்ந்து போகிறாள். 

நாயகன் எப்படி மனநிலை பாதிக்கப்பட்டார்? அவளுடைய அறைக்கு வந்து செல்லும் அந்த பெண்ணின் ஆவி யாருடையது? அவள் எதற்காக கொலை செய்யப்பட்டாள்? என்பதை சஸ்பென்ஸ், திரில்லருடன் மீதிக் கதையில் சொல்லியிருக்கிறார்கள். 

கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்திற்கு அஜய் சரியான தேர்வாக இருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்பில் இரண்டு பரிணாமங்களை காட்டி அசத்தியிருக்கிறார். நாயகி கவிதா அழகாக இருக்கிறார். இரண்டாம் பாதியிலேயே இவருடைய கதாபாத்திரம் வெளிச்சத்துக்கு வருகிறது. நடிப்பாலும், அழகாலும் வசீகரிக்கிறார். 

கல்லூரி முதல்வர் வேடத்தில் வருபவரும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். டிவி காம்பியராக வரும் இன்னொரு நாயகியும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

முதல் பாதியில் திகிலுடன் கதையை நகர்த்தும் இயக்குனர் கௌசிக், பிற்பாதியில் என்ன நடக்குமோ? என ரசிகர்களை யோசிக்க வைத்து கதைக்கு விறுவிறுப்பை கொடுத்திருக்கிறார். ஆனால், இரண்டாம் பாதியில் சீக்கிரமே அந்த ரகசியத்தை உடைத்து விடுவது கொஞ்சம் எதிர்பார்ப்பை குறைத்து விடுகிறது. 

இதுமாதிரியான திரில்லர் படங்களுக்கு ஒளிப்பதிவும், பின்னணி இசையும் மிகப்பெரிய பலமாக அமையவேண்டும். அது இந்த படத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. எல்.வி.கணேசன் இசை தியேட்டரில் பயத்தை கொடுக்கிறது. வாசனின் ஒளிப்பதிவும் முழு நிறைவை தருகிறது. 

மொத்தத்தில் ‘ஆதியும் அந்தமும்’ நிச்சயம் பயமுறுத்தும்.