Monday, March 31, 2014

நெடுஞ்சாலை - சினிமா விமர்சனம்

சில்லுன்னு ஒரு காதலை' முதல் படமாக தந்த கிருஷ்ணாவின் இயக்கத்தில், அடுத்து விலாவாரியாக வெளிவந்திருக்கிறது நம்மூர் இருட்டு நெடுஞ்சாலைகளும், அதன் திருட்டு மறுபக்கங்களும்...! 

அதிலும், திருடனுக்கும், போலீஸ்க்கும் உள்ள கூட்டு களவாணித்தனம், அதேநேரம் ஒரு அழகான பெண்ணால் அவர்களுக்குள் எழும் ஈகோ மோதல், காதல், காமம், காமெடி என சகலத்திலும் புகுந்து விளையாடி இருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா. 

அவருடன் சேர்ந்து அதகளம் செய்திருக்கின்றனர், செய்திருக்கின்றன.., ஹீரோ ஆரி, ஹீரோயின் ஸ்ரதா, போலீஸ் வில்லன், காமெடி முதலாளி உள்ளிட்டோரும், அவர்களின் நடிப்பும், ஆர்ட் டைரக்டர் சந்தானத்தின் கலர்புல் ஆர்ட்ஸ், செட்ஸ், பன்ச் வசனங்கள் இல்லை என்றாலும் சிரித்து, சிரித்து நம் வயிற்றை 'பஞ்சர்' செய்யும் வசனங்களுடன் நம்மை கதையோடு ஒன்றவிடும் ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன், இருட்டை மணிரத்னம் படங்களைக்காட்டிலும் அழகாக படம்பிடித்திருக்கும் ராஜவேல் ஒளிவீரனின் ஒளிப்பதிவு, 'எங்கேயும் எப்போதும்' சத்யாவின் இதயத்தை வருடும் இதமான இசை உள்ளிட்ட ப்ளஸ், ப்ளஸ், கூடுதல் ப்ளஸ் சமாச்சாரங்கள்!

கதையென்னவோ., நெடுஞ்சாலையில் ஓடும் சரக்கு லாரிகளில், ஓட்டப்பந்தய வீரனாட்டம் ஓடி, தாவி, ஏறி தார்ப்பாயை பிரித்து, தட்டுப்படும் பொருட்களை எல்லாம் விட்டு வைக்காமல், அந்த லாரியின் பின்னாலேயே வரும் தங்கம் சகாக்களின் வண்டியில் ஏற்றி, தன்னை நம்பியிருக்கும் ஜீவன்களை வாழ வைக்கும் திருட்டு ஹீரோவின் காவல்துறையினருடனான கொடுக்கல், வாங்கல், முட்டல், மோதல் மற்றும் தாபா கடை கதநாயகி உடனான காதல், புரிதல், கொடுக்கல், வாங்கல், இத்யாதி, இத்யாதி... சமாச்சாரங்கள் தான் என்றாலும், அதை இதயத்தை உருக்கும் விதமாகவும், உறைய வைக்கும்விதமாகவும், சொல்லியிருக்கும் படத்தில் தான் 'நெடுஞ்சாலை' ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொள்கிறது.

ஆகமொத்தத்தில், 'நெடுஞ்சாலை'க்கொள்ளை., ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை கொள்வதோடு, தயாரிப்பாளர்களுக்கும், இப்படத்தை வாங்கி வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கும் கொள்ளை லாபத்தையும் தர இருக்கிறது என்றால் மிகையல்ல!