Saturday, December 20, 2014

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'ஐ'

தமிழ்த் திரையுலக ரசிகர்களின் அடுத்த பார்வை தற்போது 'ஐ' படத்தை நோக்கி திரும்பியிருக்கிறது. 

தமிழ்த் திரையுலகம் என்றும் ஒரு வட்டத்துக்குள் இந்தப் படத்தை அடக்கி விட முடியாது, ஷங்கர் என்ற இயக்குனரின் படம் என்பதால் இந்தியத் திரையுலகமும் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. 

இரு தினங்களுக்கு முன் யு டியூபில் வெளியிடப்பட்ட 'ஐ' படத்தின் புதிய டிரைலர் இரு நாட்களுக்குள்ளேயே 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

பொங்கலுக்கு வெளிவரும் படங்களில் மற்ற எல்லா படங்களையும் விட இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம்தான். 

ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான், பி.சி.ஸ்ரீராம் போன்ற முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிப்புக்காக எதையும் செய்யத் தயங்காத விக்ரம், செலவுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கும் ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றால் இந்தப் படம் அதிகம் பேசப்படும் படமாக அமைந்துள்ளது என்பதுதான் உண்மை. 

அதே சமயம் தமிழ்த் திரையுலகத்தையும், தமிழ்ப் படங்களையும் உலக அளவிலும் பேசப்பட வைக்கும் முக்கியமான இயக்குனரான ஷங்கர் இந்தப் படத்தையும் அவருடைய முந்தைய படங்களையும் விட அதிகம் பேச வைப்பார் என்று நம்பலாம்.

தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உலக அளவிலும் ஒரு தமிழ்ப் படத்திற்கு இதுவரை இல்லாத ஒரு எதிர்பார்ப்பும், வியாபாரமும் இந்தப் படத்திற்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். 

ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'எந்திரன்' படம் உலக அளவில் பல சாதனைகளில் முதலிடத்தில் இதுவரை இருந்து வருகிறது. அதை 'ஐ' படம் கண்டிப்பாக முறியடித்து பல சாதனைகைளைப் புரியும் என்பதை இப்போதே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.